Wednesday, January 18, 2006

ஹைடெக் பண்ருட்டி நகராட்சி


ஹைடெக் பண்ருட்டி

பில்லியன்களில் பணம் புழங்கும் ஒரு சர்வதேச கம்ப்யூட்டர் நிறுவனத் துக்குள் நுழைகிற பிரமிப்பு ஏற்படுகிறது... பண்ருட்டி நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தால்!



பளிச் என துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி சுத்த மாக இருக்கிறது அலுவலகம். குரோட்டன்ஸ் செடிகளும், செயற்கைப் புல்லும் கண்களைக் குளிர வைக்கின்றன. மழைநீர் சேகரிப்பை விளக்க வைக்கப்பட்ட தொட்டி ஒன்று செயற்கை மழை பொழிந்தபடி இருக்கிறது.


இப்படி தமிழகத்தில் எந்த அரசு அலுவலகத்திலும் இல்லாத ஆச்சர்யங்கள் இங்கு ஏராளம். இங்கு வேலை பார்க்கிற யாருக்கும் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத் துப் போட வேண்டியதில்லை. நுழைவாயில் அருகே இருக்கும் வாட்ச்மேன் ரூமில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது. ஊழியர்கள் அதில் இருக்கும் ஸ்கேனரில் தங்கள் விரல்ரேகையைக் காட்டி னால் போதும்... அவர்களது வருகை பதிவாகி விடுகிறது. சரியான நேரத்துக்கு வராமல் ஒரு நிமிஷம் லேட்டானாலும் சரி... தாமத வருகை என பதிவாகும். அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் போச்சு... அவர்கள் தலைகீழாக நின்றா லும் வருகை பதிவாகாது. அன்று அவர் லீவ் எடுத்ததாக கம்ப்யூட்டர் தீர்மானித்து விடும். இதனால் எல்லோரும் கரெக்டாக வேலைக்கு வருகிறார்கள்.

ஆட்களை மட்டுமில்லை... வாகனங்களையும் கண்காணிக் கிறது கம்ப்யூட்டர். கமிஷனர் ஜீப் முதல் குப்பை லாரி வரை எல்லாவற்றுக்கும் ஒரு பஞ்ச் கார்டு இருக்கிறது. அதை வைத்து எந்த வண்டி எப்போது வெளியில் போனது... எப்போது திரும்பி வந்தது... டிரைவர் யார் என எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் பதிவு செய்து கொள்கிறது.
ஆபீஸ§க்குள் நுழைந்தால் எந்த டேபிளிலும் தூசு படிந்து கிடக்கும் அழுக்கு ஃபைல்களைப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஊழியருக்கும் அழகான தடுப்புகள் அமைத்து எல்லோர் டேபிளிலும் கம்ப்யூட்டர் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமில்லை... அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை எல்லோரும் யூனிஃபார் மில் இருக்கிறார்கள்.


‘‘முன்னேற்றம் இதில் மட்டுமில்லை. எங்கள் சேவையிலும்தான்’’ என நம்மிடம் பெருமை யாகச் சொன்னார், நகராட்சி சேர்மன் பஞ்ச வர்ணம் (காங்கிரஸ்). இந்த மாற்றங்களின் காரணகர்த்தா இவர்தான்! ‘வரி கட்ட கொடுத்த பணத்தை மோசடி பண்ணிட் டாங்க’, ‘சர்டிஃபிகேட் கேட்டா இழுத்தடிக் கிறாங்க’ என்கிற மாதிரி புலம்பல்களை இந்த அலுவலகத்தில் கேட்க முடியாது. எல்லாமே இங்கு வெளிப்படையாக நடக்கி றது. அலுவலக வராண்டாவில் ‘தகவல் தேடு திரை’ கம்ப்யூட்டர் இருக்கிறது. வீட்டு வரி கட்டவரும் ஒருவர் தங்கள் வீட்டு வரி விதிப்பு எண்ணை இதில் தட்டினால் போதும்... ‘வரி பாக்கி எவ்வளவு?’ என கம்ப்யூட் டர் திரை காட்டும். பக்கத்திலேயே இருக்கும் தகவல் மையத்தில் பணம் கட்டினால் பில் போட்டு தருகிறார்கள். சரியான தொகை போட்டு, கட்டுபவர் பெயர் சரியாகப் போட்டுதான் பில் ரெடியாகிறதா என்பதை அவர் தன் எதிரே இருக்கும் திரையில் பார்க்கலாம். கட்டுபவருக்குத் தெரியாமல் ரகசியமாக பில் போடுவதில்லை.


சீருடையில் நகராட்சிப் பணியாளர்கள்... தண்ணீர் வரி, கடை வாடகை, பிறப்பு&இறப்பு சான்றிதழ் கள், வீடு கட்ட பிளான் அப்ரூவல் என எல்லாமும் இப்படித்தான். இங்கே வந்துதான் தேட வேண்டும் என்றில்லை... வீட்டில் இருந்தபடியே தண்ணீர் வரியா... வீட்டு வரியா... அதற்குரிய வரிவிதிப்பு எண்ணைக் குறிப்பிட்டு, "98423 99099" என்ற செல்போன் நம்பருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினால் போதும்... அடுத்த நொடி வரி பாக்கி விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வருகி றது (வரி கட்டியபிறகு மறக்காமல் ‘நன்றி’ மெஸேஜ் அனுப்புகிறார் கள். அதில் எவ்வளவு பணம் கட்டினார்கள் என்ற விவரமும் இருக் கிறது. இதற்காக ஏர்செல் நிறுவனம் தானியங்கி மெஸேஜ் சர்வர் ஒன்றை நகராட்சிக்குக் கொடுத் திருக்கிறது). புது குடிநீர் இணைப்பு, வீடு கட்ட அப்ரூவல்... இந்த இரண்டும்தான் பல நகராட்சிகளில் சிரமமான விஷயங் கள். இதற்காக ஆண்டுக்கணக்கில் நடப்ப வர்கள்கூட உண்டு. இங்கு அதிகபட்சம் ஒரு வாரம்தான். அதற்குள் கொடுத்து விடுகிறார்கள்.

‘‘ஏதோ கனவில் நடக்கற மாதிரி தெரியுது. ஆனால், நிஜம். இத்தனையும் ஒரே நாள்ல மாறிடலை. காலம்காலமா இருக்கற நடைமுறைகளை அப்படி மாத்திடவும் முடியாது. எனக்கு எட்டு வருஷங்கள் ஆச்சு’’ என்கிற பஞ்சவர்ணம், கடந்த 96&ம் ஆண்டு முதல் பண்ருட்டி சேர்மனாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இவர் சேர்மன். என்றாலும் அவர் கட்சி சார்பில் ஒரே ஒரு கவுன்சிலர்கூட இல்லை. எல்லோருமே மற்ற கட்சியினர்தான். ஆனாலும், பஞ்சவர்ணம் நிகழ்த்திக் காட்டிய விஷயங் களுக்கு மக்கள் மத்தியில் அபாரமான செல்வாக்குக் கிடைத்து விட்டதால், யாரும் எதிர் அரசியல் செய்ய விரும்பவில்லை.

‘‘சேர்மன் ஆன புதுசுல எனக்கு ஒண்ணுமே தெரியாது. மீட்டிங் நடக்கும். தீர்மானங்களை அதி காரிகளே ரெடி பண்ணி நிறைவேத்திக்கிட்டுப் போயிடுவாங்க. அப்புறம் நாம எதுக்கு இருக்கோம்னு சந்தேகம் வந்தது. பொதுமக்கள் குறையோட வந்தா, அவங்களுக்கு பதில் சொல்ல முடியலை. இந்த லெட்ஜர் இல்லை... அந்த ஆபீஸர் லீவ்னு ஏதாவது காரணம் சொல்வாங்க.


நான் அதிகம் படிக்காதவன். முன்னாடி எனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒண்ணும் தெரியாது. இந்த எல்லா விவரங்களையும் கம்ப்யூட்டர்ல ரெக்கார்டு பண்ணி வச்சிட்டா, சுலபமா கண் காணிக்க முடியும்னு நண்பர்கள் சொன்னாங்க. சேதுசங்கர்னு ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயரை வச்சிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சேன். அரசாங்க உதவி எதையும் கேட்கலை. நாங்களே சான்றிதழ்கள், படிவங்களை டிசைன் செய்தோம். இப்போ இந்த நகரத்துல இருக்கற எல்லா தகவல்களும் என்னோட விரல்நுனியில். கடந்த நாற்பது வருஷத்துல நடந்த பிறப்பு, இறப்பு எல்லாம் ரெக்கார்ட் பண்ணிட் டோம். சர்டிஃபிகேட் தொலைஞ்சி போச்சுனு வர்றவங்க நிம்மதியா வாங்கிக்கிட்டு போறாங்க.

நகராட்சி விடற கான்ட்ராக்ட் விவரங்கள் எல்லாம் அதுல இருக்கும். இதுதவிர என் ரூம்லயும் அதை வெளிப் படையா எழுதி வச்சிடுவேன். யார் வேணாலும் வந்து பார்த்துத் தெரிஞ்சிக்கலாம். இதே மாதிரி நகராட்சி போன்களுக்கு எவ்வளவு பில் வருதுனு போர்டு எழுதி வச்சேன். அதுக்கப்புறம் பில் தொகை தடாலடியா குறைஞ்சது. மக்கள் கேள்வி கேட்பாங்கனு புரிஞ்சுதுனா எல்லோருமே நல்லவிதமா நடக்க முயற்சி பண்றாங்க.


பொதுமக்கள் யாரும் ஆபீஸ§க்குள் போகவேண்டாம்னு நான் உத்தரவு போட்டிருக்கேன். தனியா பார்த்தா தானே தப்புகள் நடக்குதுனு சொல்றாங்க. மனு கொடுத்தாலே போதும்... தனியா கவனிக்க வேண்டியதில்லை. தகவல் மையத்துல உட்கார்ந்தபடி அவங்க தேவையான சான்றிதழ்களை வாங்கிக்கலாம். இந்த சான்றிதழ் இத்தனை நாளைக்குள்ளே கண்டிப்பா தந்தாகணும்னு இருக்கும்போது எதுக்காக மக்கள் தேவையில்லாம செலவழிக்கணும்?’’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார் பஞ்சவர்ணம்.



‘‘இந்த எல்லா தகவல்களும் பண்ருட்டி நகராட்சியோட இணைய தளத்திலும் இருக்கும். நகராட்சிக்காக இந்த எல்லா படிவங்கள், ரெக்கார்டுகளை இலவசமா நான் உருவாக்கிக் கொடுத்தேன். தமிழ்நாட்டில் எந்த நகராட்சியும் இதே படிவங்களைப் பயன்படுத்தி வெளிப்படையாக நிர்வாகம் செய்ய முடியும்’’ என்று நம்மிடம் சொன்னார், இவற்றை உருவாக்கிய சேதுசங்கர்.

உள்ளாட்சி அதிகாரிகள் முதல் உலக வங்கி அதிகாரிகள் வரை பண்ருட்டி வந்து இந்த நிர்வாக அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். ‘‘சமீபத்துல ஜனாதிபதியைப் பார்க்கற வாய்ப்பு கிடைச்சது. அவரிடம் எல்லாத்தையும் சொல்லி, ‘இப்போ எல்லாமே வெளிப்படையா நடக்குது’னு சொன்னேன். ‘இது சாத்தியமா?’னு ஆச்சர்யமா கேட்டார்.
எத்தனையோ நகராட்சி சேர்மன்கள் வந்து பார்த்தாங்க. ஆபீஸைப் பார்த்துட்டு ‘இதெல்லாம் எங்க ஊர்ல சாத்தியமே இல்லை’னு உதட்டைப் பிதுக்கிட்டுப் போயிட்டாங்க. ‘நானும் இதெல்லாம் நடக்காதுனுதான் நினைச்சேன். ஆனா, முயற்சி பண்ணின பிறகு நடந்திருக்கு. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்’னு சொன்னா, யாரும் கேட்கறதில்லை. எங்கெல்லாம் உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூட்டம் நடக்குதோ அங்கே போய், எங்க ஊர்ல நாங்க சாதிச்சதைச் சொல்றேன். அப்படியும் யாரும் இந்த வழியில வர்றதுக்கு முயற்சி செய்யலை. இதுதான் எனக்குப் பெரிய வருத்தம்’’ என்று ஏக்கத்துடன் முடித்தார் பஞ்சவர்ணம்.


மக்களுக்கு காப்பீடு...

இன்னும் சில மாதங்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என ஒரு பட்டியல் வைத்திருக்கிறார் பஞ்சவர்ணம். அதை எல்லாம் கேட்டால், பண்ருட்டி மக்கள் மீது பொறாமையாக வருகிறது.

நகருக்குள் இருக்கும் எல்லோருடைய சொத்துக்களுக்கும் சர்வே படம் வரையப்பட்டு அவை சிட்டா அடங்கல் விவரங்களோடு கம்ப்யூட்டரில் புகுத்தப்படும். அதன்பிறகு வேலி பிரச்னைக்காக அடிதடியில் இறங்க வேண்டாம்... போலீஸ் ஸ்டேஷனுக்கும் போக வேண்டாம். நகராட்சி அலுவலகத்தில் வந்து தேடுதிரையில் பார்த்தால் போதும்... ஒவ்வொருவரது எல்லை தெரிந்துவிடும். இந்த வேலையை இப்போது ஆரம்பித்து விட்டார்கள். நகர மக்கள் எல்லோருக்கும் நகராட்சி சார்பில் ஒரு அடையாள அட்டை வழங்குகிறார்கள். போட்டோவுடன் இருக்கும் இந்த அடையாள அட்டையில் முகவரி, பிளட் குரூப், வீட்டுவரி எண், குடிநீர்வரி எண், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பேங்க் பாஸ் புத்தகம், மின் இணைப்பு, கேஸ் இணைப்பு என எல்லாவற்றின் எண்களும் இருக்கும். எதற்காகவும் வீட்டைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தேட வேண்டியதில்லை. இதுவரை ஐந்து வார்டுகளில் இதை எல்லோருக்கும் கொடுத்து முடித்திருக்கிறார்கள்.

பண்ருட்டி நகரில் இருக்கும் எல்லா பொதுமக்களையும் இன்ஷ¨ரன்ஸ் காப்பீடு செய்யப் போகிறது நகராட்சி. மூன்று மாதக் குழந்தை முதல் எழுபது வயது பெரியவர் வரை எல்லோரும் இதில் அடங்குவார்கள். ஒவ்வொருவரையும் பத்தாயிரம் ரூபாய்க்கு காப்பீடு செய்கிறார்கள். இதற்காக ஒரு நபருக்கு மூன்று ரூபாய் நாற்பது பைசா பிரீமியம் தொகையை நகராட்சி சேர்மனும், உறுப்பினர்களும் சேர்ந்து செலுத்தப் போகிறார்கள்.

இனி நகராட்சிக்கு வந்து யாராவது புகார் கடிதம் கொடுத்தால், அந்தக் கடிதத்துக்கு ஒரு நம்பர் கொடுக்கப்படும். அந்த நம்பரை வைத்து செல்போனில் மெஸேஜ் அனுப்பினாலே போதும்... அந்த புகாரின் தற்போதைய நிலவரம் என்ன என்பது தெரிந்துவிடும். செல்போன் இல்லாதவர்கள் நகராட்சியில் இருக்கும் தேடுதிரையில் பார்த்துக் கொள்ளலாம்!
நன்றி: ஜூனியர் விகடன்




4 comments:

Voice on Wings said...

முக்கியமானதொரு இடுகை. பல சிந்தனைகளைத் தூண்டுகின்ற தகவல்கள். இதனைத் தொடர்ந்த எனது எண்ணங்களைப் பதிவாக எழுத நினைக்கிறேன். ஓரிரு நாட்களில் முடிந்தால் நல்லது.

உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்தோடு இணைத்துக் கொண்டால், அதிகமான வருகையாளர்களைப் பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

Sivabalan said...

நல்ல பதிவு..

படிக்கும் போதே சந்தோசமாக இருக்கிறது..

நன்றி,

dondu(#11168674346665545885) said...

இன்றுதான் இப்பதிவைப் பார்த்து பின்னூட்ட சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போதைய நிலைமை அங்கு எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வேளராசி said...

நல்ல பதிவு..

படிக்கும் போதே சந்தோசமாக இருக்கிறது..

நன்றி,