Wednesday, December 20, 2006

வெளிநாட்டில் மென்பொருள் பணிபுரிய வருவோர்க்கு சில குறிப்புகள்.

இங்கு நான் குறிப்பிடும் விடயங்கள் என்னுடைய சில ஆண்டு அனுபவத்தில் கற்றுக்கொண்டது அல்லது மற்ற இந்தியர்களிடம் கண்டது. இந்தியர்களின் வேலைத்திறன் பற்றி வெளிநாட்டினர் எள்ளளவும் சந்தேகம் கொள்வதில்லை. ஆனால் நம்மவரின் சுகாதாரம், உடைகள், பழக்க வழக்கங்கள் குறித்து மட்டமான அபிப்ராயம் அவர்களிடத்திலே உண்டு.

1. அலுவலகத்தில் வேலை செய்யுமிடத்தில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். தவிர்க்க முடியாமல் தாய்மொழியில் பேச வேண்டியிருந்தால் அடுத்தவரை தொந்தரவு செய்யா வண்ணம் மெல்லிய குரலில் பேசுங்கள்.

2. பொதுவாகவே இந்தியர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும் வியர்வை வீச்சத்தை வெளிநாட்டினர் யாரும் விரும்புவதில்லை. பணியிடத்துக்கு வரும்போது கட்டாயம் டியோடரண்ட் அணிந்து வாருங்கள். டியோடரண்ட் உபயோகிப்பது வியர்வை வாடையை கட்டுப்படுத்தவே. எனவே அதை உடைகள் மீது ஸ்ப்ரே அடிக்காதீர்கள்.

3. 'பட்டன் டவுன்' சட்டை அணிந்து இருந்தால் காலர் பட்டனைத் தவறாமல் போட்டுக்கொள்ளவும். இல்லாவிட்டால் பட்டன் டவுன் இல்லாத சட்டையாக தெரிவு செய்யுங்கள்.

4. முடிந்தவரை கால்சட்டைக்கு மேட்ச் ஆகும் சாக்ஸ் அணியுங்கள். அது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கருப்பு கலர் சாக்ஸ். கால்சட்டையும் சாக்ஸும் மேட்ச் ஆகவேண்டும். பெல்ட்டும் ஷூவும் மேட்ச் ஆகவேண்டும்.

5. காலை/மதிய உணவு உண்டபின் மவுத் பிஃரெஷ்னர் ஏதாவது இட்டுக் கொள்ளுங்கள்.

6. எந்த மீட்டிங் சென்றாலும் தேவை உள்ளதோ இல்லையோ, ஒரு நோட்பேட் மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இது நீங்கள் மீட்டிங்கை முக்கியமானதாக கருதுகிறீர்கள் என்ற எண்ணத்தை மற்றவரிடம் உருவாக்கும்.

7. இந்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும். நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை மற்ற நாட்டினர் முன் போட்டுடைக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் நம்நாட்டின் பிரதிநிதிகள் என்பதை எப்பொழுதும் மறக்கலாகாது.

8. லிப்டிலோ அல்லது கதவு அருகிலோ பெண்கள் வந்தால், கதவைத் திறந்து அவர்கள் முதலில் செல்ல வழிவிடுங்கள்.

9. எஸ்கலேட்டரில் செல்லும்போது பாதை முழுவதையும் அடைக்காமல் விரைந்து செல்பவர்களுக்கு ஏதுவாக ஒதுங்கி நில்லுங்கள்.

10. வெளிநாட்டினரை அழைக்கும் விருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் துவக்குங்கள். நேரந்தவறாமையை இந்தியர்களுடனும் கடைபிடிக்க வலியுறுத்துங்கள்.




Saturday, December 02, 2006

அமெரிக்காவில் ஒரு இந்திய மேலாளர்/முதலாளி


நான் குறிப்பிடப்போகும் சம்பங்கள் நடந்தது எங்களூரில் உள்ள இந்திய அங்காடியில் நடந்தது. இந்த அங்காடியை நடத்தும் தம்பதியரில் கணவர் அலுவலகப் பணிக்கு சென்று விடுவதால் அவரின் மனைவியே கடையையும், அதனுடன் இணைந்த உணவுவிடுதியையும் கவனித்துக்கொள்வார். வாடிக்கையாளரான நாங்கள் பொருட்கள் வாங்குவதுடன் அடிக்கடி மதிய உணவு சாப்பிட செல்வோம். எனவே எங்களுடன் சகஜமாக உரையாடுவார். இங்கு சமையலரையில் வேலை செய்து வருபவர் ஒரு லேட்டினொ. அடுத்து பறிமாறுபவர் ஒரு வெள்ளைக்கார யுவதி.

1. நிகழ்வு ஒன்று:

ஒவ்வொரு முறை மதிய 'பஃப்பே' உணவு சாப்பிடும்போதும், பக்கோடா அல்லது பஜ்ஜியில் உப்பு அதிகமாக இருக்கும். இந்த முறை பில் கொடுக்கும்போது சரி இந்த பக்கோடாவில் உப்பை கொஞ்சம் குறைக்கலாமே என்று 'உரிமையாளர் பெண்மணியிடம்' பின்னூட்டம் கொடுத்தோம். அவர், எல்லோரும் இதைப்பற்றி குறிப்பிடுகிறார்கள். KJதான் (லேட்டினோ சமையல்காரர்) இவற்றை சமைக்கிறார். நானும் எவ்வளவோ தடவை சொல்லிப் பார்த்திவிட்டேன். அவர் கேட்பதில்லை. இருங்கள், KJவைக் கூப்பிடுகிறேன். நீங்களே சொல்லுங்கள் என்றார். எனக்கு, இதென்னடா வம்பா போச்சேன்னு ஆயிடுச்சு. இல்ல, நீங்களே அவரிடம் சொல்லுங்களேன் என்றேன். இப்போ, எங்களுடன் மேலும் சில வாடிக்கையாளர்கள் அங்கு நின்றிருந்தார்கள். அப்பெண்மணி, KJவைக் கூட்டியே வந்துவிட்டார். சரி, ஆனது ஆச்சு என்று, buddy, இந்த பக்கோடாவுல எல்லாம் நல்லாருக்கு. உப்ப மட்டும் குறைச்சா இன்னும் நல்லாருக்கும் என்று சொன்னேன். அந்த லேட்டினொ இளைஞனின் முகமாற்றம் பார்க்க பரிதாபமாக இருந்தது. என்னோட ஆதங்கமெல்லாம், இந்த பெண்மணி தனது பணியாளரை தனியாக கூப்பிட்டு சொல்லியிருக்கலாம். என்னோட அணியில் ஒருவரோ, இல்லை நானோ இப்படி ஒரு நிலையில் இருந்தால் இப்படி வெளிப்படையாக குத்து வாங்குவதை விரும்பப்போவதில்லை. பாவம், அந்த இளைஞருக்கு என்ன கட்டாயமோ, இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அங்கே தொடருகிறார்.

2. நிகழ்வு இரண்டு:

இந்த முறை பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். எனக்கு முன்னர் ஒரு வெள்ளைக்காரர் சில பொருட்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல ஆயத்தப்பட்டார். அவரும் இந்தப் பெண்மணிக்குத் தெரிந்தவர் போல. அப்போது உரிமையாளர் பெண்மணி, Sylvia, help Steve to take his stuff to his car என்று தன்னுடைய வெள்ளைக்காரப் பணிப்பெண் யுவதியிடம் பணித்தார். அந்த பெண்ணும் ஸ்டீவின் அருகில் சென்றார். அந்த வெள்ளைக்கார வாடிக்கையாளர் oh no.. I'm fine என்று மறுத்துவிட்டார். யுவதியும் ஒரு கணம் யோசித்துவிட்டு are you sure என்று ஸ்டீவிடம் கேட்டுவிட்டு திரும்பி சென்றுவிட்டார். அமெரிக்காவில் நல்ல உடல்நலமுள்ள யாரும் அனாவசியமாக அடுத்தவரின் உதவியை எதிர்பார்ப்பதில்லை. மேலும் அந்த யுவதியும் இந்நிகழ்வை எப்படி நோக்கினார் என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்.

இந்த இரு நிகழ்வுகளிலும் எனக்கு என்ன கேள்வி தோன்றியது என்றால், இந்திய பாணி மேலாண்மை முறையை அமெரிக்காவில் பயன்படுத்த முடியுமா என்பதுதான்.