Saturday, December 02, 2006

அமெரிக்காவில் ஒரு இந்திய மேலாளர்/முதலாளி


நான் குறிப்பிடப்போகும் சம்பங்கள் நடந்தது எங்களூரில் உள்ள இந்திய அங்காடியில் நடந்தது. இந்த அங்காடியை நடத்தும் தம்பதியரில் கணவர் அலுவலகப் பணிக்கு சென்று விடுவதால் அவரின் மனைவியே கடையையும், அதனுடன் இணைந்த உணவுவிடுதியையும் கவனித்துக்கொள்வார். வாடிக்கையாளரான நாங்கள் பொருட்கள் வாங்குவதுடன் அடிக்கடி மதிய உணவு சாப்பிட செல்வோம். எனவே எங்களுடன் சகஜமாக உரையாடுவார். இங்கு சமையலரையில் வேலை செய்து வருபவர் ஒரு லேட்டினொ. அடுத்து பறிமாறுபவர் ஒரு வெள்ளைக்கார யுவதி.

1. நிகழ்வு ஒன்று:

ஒவ்வொரு முறை மதிய 'பஃப்பே' உணவு சாப்பிடும்போதும், பக்கோடா அல்லது பஜ்ஜியில் உப்பு அதிகமாக இருக்கும். இந்த முறை பில் கொடுக்கும்போது சரி இந்த பக்கோடாவில் உப்பை கொஞ்சம் குறைக்கலாமே என்று 'உரிமையாளர் பெண்மணியிடம்' பின்னூட்டம் கொடுத்தோம். அவர், எல்லோரும் இதைப்பற்றி குறிப்பிடுகிறார்கள். KJதான் (லேட்டினோ சமையல்காரர்) இவற்றை சமைக்கிறார். நானும் எவ்வளவோ தடவை சொல்லிப் பார்த்திவிட்டேன். அவர் கேட்பதில்லை. இருங்கள், KJவைக் கூப்பிடுகிறேன். நீங்களே சொல்லுங்கள் என்றார். எனக்கு, இதென்னடா வம்பா போச்சேன்னு ஆயிடுச்சு. இல்ல, நீங்களே அவரிடம் சொல்லுங்களேன் என்றேன். இப்போ, எங்களுடன் மேலும் சில வாடிக்கையாளர்கள் அங்கு நின்றிருந்தார்கள். அப்பெண்மணி, KJவைக் கூட்டியே வந்துவிட்டார். சரி, ஆனது ஆச்சு என்று, buddy, இந்த பக்கோடாவுல எல்லாம் நல்லாருக்கு. உப்ப மட்டும் குறைச்சா இன்னும் நல்லாருக்கும் என்று சொன்னேன். அந்த லேட்டினொ இளைஞனின் முகமாற்றம் பார்க்க பரிதாபமாக இருந்தது. என்னோட ஆதங்கமெல்லாம், இந்த பெண்மணி தனது பணியாளரை தனியாக கூப்பிட்டு சொல்லியிருக்கலாம். என்னோட அணியில் ஒருவரோ, இல்லை நானோ இப்படி ஒரு நிலையில் இருந்தால் இப்படி வெளிப்படையாக குத்து வாங்குவதை விரும்பப்போவதில்லை. பாவம், அந்த இளைஞருக்கு என்ன கட்டாயமோ, இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அங்கே தொடருகிறார்.

2. நிகழ்வு இரண்டு:

இந்த முறை பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். எனக்கு முன்னர் ஒரு வெள்ளைக்காரர் சில பொருட்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல ஆயத்தப்பட்டார். அவரும் இந்தப் பெண்மணிக்குத் தெரிந்தவர் போல. அப்போது உரிமையாளர் பெண்மணி, Sylvia, help Steve to take his stuff to his car என்று தன்னுடைய வெள்ளைக்காரப் பணிப்பெண் யுவதியிடம் பணித்தார். அந்த பெண்ணும் ஸ்டீவின் அருகில் சென்றார். அந்த வெள்ளைக்கார வாடிக்கையாளர் oh no.. I'm fine என்று மறுத்துவிட்டார். யுவதியும் ஒரு கணம் யோசித்துவிட்டு are you sure என்று ஸ்டீவிடம் கேட்டுவிட்டு திரும்பி சென்றுவிட்டார். அமெரிக்காவில் நல்ல உடல்நலமுள்ள யாரும் அனாவசியமாக அடுத்தவரின் உதவியை எதிர்பார்ப்பதில்லை. மேலும் அந்த யுவதியும் இந்நிகழ்வை எப்படி நோக்கினார் என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்.

இந்த இரு நிகழ்வுகளிலும் எனக்கு என்ன கேள்வி தோன்றியது என்றால், இந்திய பாணி மேலாண்மை முறையை அமெரிக்காவில் பயன்படுத்த முடியுமா என்பதுதான்.




1 comment:

ஜி said...

சூப்பரா சொல்லியிருந்தீங்க & கேட்டிருந்தீங்க!

இந்திய மக்கள் நிறைய பேர் இந்திய வேலை பண்பாட்டையே இங்கும் செயல்படுத்த முனைகின்றனர். இங்குள்ள கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சிறிது கற்றுக்கொண்டால் மேலாளர் பதவியில் சாதனை புரியலாம் :)